Saturday, 8 May 2010

தயக்கம்

நம்மை கீழே இழுக்கும் குணங்களுள் முக்கியமான ஒன்று: தயக்கம்!! ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றை சாதிக்க நினைக்கிறோம் ஆனால் அப்படி சாதிக்க நினைக்கும் விஷயத்திற்காக என்ன முயற்சி எடுக்கிறோம்? " எழுத்தாளராக வேண்டும்" "MBA படிக்க வேண்டும் " இப்படி ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ ஆசைகள்.. ஆனால் அவை எல்லாம் ஆசை என்ற அளவிலேயே உள்ளதே அன்றி அடுத்த நிலை போவதில்லை. காரணம் நமக்குள் உள்ள தயக்கம் தான்
      இத்தகைய நேரத்தில்/ விஷயத்தில் இன்னொரு பிரச்சனை. இப்படி தாமதம் செய்யும் போது நாம் செய்யணும், செய்யணும் என நினைத்த விஷயத்தை இன்னொருவர் செய்து முடித்து விடும் ஆபத்தும் உள்ளது.

பெரியவர்கள் " நல்ல விஷயத்தை தள்ளி போடாதே; கெட்டது செய்யணுமா அதனை தள்ளி போடு " என்பார்கள். ஒருவருக்கு தானம் செய்ய நினைக்கிறோம்; அதனை விரைவில் செய்வதே நல்லது; இல்லா விட்டால் "வேறு யாராவது செய்யட்டும்; நாம் ஏன் செய்யணும்?" என மனசு நினைக்க ஆரம்பித்து விடும்.

அதே நேரம் ஒருத்தருக்கு கெட்டது செய்யணும் என தோன்றுகிறது: அவர் உங்களுக்கு செய்த தீங்கிற்கு உடனே திரும்ப குடுக்க தோன்றுகிறது. இதனை உடனே செய்ய வேண்டாம். முதலில் தள்ளி போட வேண்டும். சில மாதங்களில் அந்த எண்ணம் வலுவிழந்து விடும். சட்டத்தில் கூட நீண்ட நாள் பகையால் கொலை செய்தவரை நீதி மன்றம் கடுமையாய் பார்க்கிறது; " He was able to sustain such negative emotion for a long period of time" என!

நான் கவனித்த வரை MD மற்றும் CEO-க்கள் அநேகமாய் எதையும் தயக்கம் இன்றி செய்பவர்களாக, பேசுபவர்களாக உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள் புதியவர்களிடம் கூட தயக்கம் இன்றி பழகுவதை, கேள்வி கேட்பதை, உதவிகள் வேண்டுவதை பார்த்துள்ளேன். இவர்கள் தான் பெரும்பாலும் வெற்றியாளர்களாக உள்ளனர்.

இன்டர்வியுக்களிலும், குறிப்பாக குருப் டிஸ்கஷன்களிலும் நாம் தயக்கம் இன்றி பேசுகிறோமா என்பது தான் முக்கியமாக கவனிக்கிறார்கள். நாம் சொல்லும் கருத்தை விட சொல்லும் விதம் (Confidence உடன் தயக்கம் இன்றி பேசுதல்) தான் அவற்றில் முக்கிய விஷயமாக கொள்ளபடுகிறது.

ஒரு எழுத்தாளரையோ, பதிவரையோ எடுத்து கொள்ளுங்கள். அவருக்கு இன்ன தான் எழுத வேண்டும் என யாராவது சொல்கிறார்களா என்ன? என்ன தலைப்பு என்பது முதல், என்ன எழுதுவது என்பது வரை தானே யோசித்து தயக்கம் உதறி மேலே செல்கிறார்கள்.

எந்த field-லுமே "Early bird has an advantage" என்பார்கள். தயக்கம் இன்றி, ஒரு முயற்சியை பிறர் துவங்கும் முன், துவக்கத்திலேயே ஆரம்பித்தவர்கள் ஓட்டத்தில் முன்னணியில் இருப்பார்கள்.

"நூறு மைல் பயணம் நீங்கள் முதல் எடுத்து வைக்கும் முதல் அடியில் தொடங்குகிறது" என்று ஒரு பழமொழி உண்டு. எத்தனை அர்த்தமுள்ள பழமொழி!!

சில வேலைகளை துவங்கும் போது அதனை முழுமையாய் எப்படி செய்து முடிப்பது என்பது குறித்த ஒரு தெளிவான ஐடியா இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து போக போக அதனை எப்படி முடிப்பது என்ற தெளிவு வந்து விடும். மேலும் இது சம்பந்தமான மனிதர்களை நீங்கள் சந்திப்பது இயல்பாய் நடக்கும். அவர்கள் அதனை எப்படி முடிப்பது என்ற யோசனையும், உதவியும் செய்வார்கள். எல்லா வேலைகளும் (குறிப்பாய் இது வரை ஈடுபடாத புது வேலைகள்) இப்படி தான் முடிகிறது.

நீங்கள் இது வரை போகாத ஒரு இடத்திற்கு புதிதாய் செல்கிறீர்கள்; அப்போது ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த வழியாக போவது என முழுதும் தெரிந்தால் தான் போவேன் என்றால் அது நடக்கிற காரியமா என்ன? பயணத்தை துவங்கி விட்டால், போக போக யாரிடமாவது வழி கேட்டு, கேட்டு சென்று விடுகிறோம் தானே? வாழ்க்கையில் நாம் செய்யும் பல புது விஷயங்களும் இதே போல் தான்!!

No comments:

Post a Comment