இன்றைய வேலையை இன்றே செய், முடிந்தால் நாளைய வேலையையும் இன்றே செய். ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதே, ஏனென்றால், நாளை என்ற ஒன்று இல்லவே இல்லை
லொம்பார்டி கோட்பாடு' என்பது பிரசித்தமானது. புகழ்பெற்ற கால்பந்து பிளேயராக இருந்து பின்னாளில் பயிற்சியாளர் ஆனவர் லொம்பார்டி. இவர் பயிற்சி அளிக்கும் அணி வீரர்கள் பயிற்சி நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே மைதானத்துக்கு வந்து காத்திருக்க வேண்டும். 2.30 மணிக்குப் பயிற்சி ஆரம்பம் என்றால், 2 மணிக்கே மைதானத்தில் இருக்க வேண்டும். 2.05-க்கு வந்தால்கூட தாமத வருகைதான் அது. ஆனால், அந்த அரை மணி நேரத்தில் வீரர்களுக்கு எந்த வேலையும் கிடையாது. வெறுமனே மைதானத்தில் அமர்ந்து பயிற்சிக்குக் காத்திருக்க வேண்டும். டாணென்று 2.30-க்குப் பயிற்சி ஆரம்பிக்கும். இந்த முறையில் பயிற்சியைத் தொடங்கியதில் இருந்து, லொம்பார்டியின் அணி வீரர்கள் கால்பந்து போட்டி தொடங்கிய நிமிடத்தில் இருந்தே கோல் மழை பொழிய ஆரம்பித்தார்கள். தொடர் வெற்றிகளைக் குவிக்கவைத்தது லொம்பார்டி கோட்பாடு. அதனை ஆராய்ந்த உளவியலாளர்கள் காரணத்தை இப்படி விளக்கினார்கள். 'போட்டி இரண்டரை மணிக்குத்தான் என்றாலும், 2 மணிக்கு மைதானத்தில் இருக்க வேண்டும் என்ற மனப்போக்கு, துவக்க நிமிடத்தில் இருந்தே நமது பெஸ்ட்டைத் தர வேண்டும் என்ற எண்ணத்தை வீரர்களின் மனதில் உருவாக்குகிறதாம். 'போட்டிதான் ஒன்றரை மணி நேரம் நடக்குமே... முதல் இடைவேளைக்குப் பிறகு கோல் அடித்துக்கொள்ளலாம். எதிரணிதான் இன்னும் கோல் போடவில்லையே. அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!' போன்ற சாக்கு தேடும் மனப்போக்கினை அந்த முந்தைய அரை மணி நேரம் அடித்து உடைத்து விடுகிறது. அதுவும் இல்லாமல் போட்டி முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வீரர்களின் ஆழ்மனம் உணர் வதால், அரை மணி நேரம் முன்பாகவே போட்டி முடிந்துவிடும் என்ற எண்ணமும் அவர்களை அறியாமல் மனதில் பதிந்து எதிரணியைக் காட்டிலும் ஓட்டமாக ஓடுகிறார்கள். இதன் மூலமே லொம்பார்டி அணி வெற்றிகளைக் குவித்தது!
இந்தக் கோட்பாடு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருந்தும். 'செமஸ்டர் மார்ச்சில்தானே... இப்போது நவம்பர்தானே!' என்ற எண்ணம் பாஸ் மார்க் வாங்கப் போதுமானதாக இருக்கும். ஆனால், நூற்றுக்கு நூறு மனோபாவத்துக்கு இந்த எண்ணம்தான் முதல் எதிரி. இந்த மனோபாவத்தை மாற்றி ஆரம்பம் முதலே நமது பெஸ்ட்டைக் கொடுப்பதன் மூலம், நம் இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே அடைந்துவிடலாம். அதே சமயம் 'அதான் வேலை கிடைத்துவிட்டதே', 'திருமணமாகிவிட்டதே' என்பதுபோன்ற அசட்டை மனோபாவம் நமது பல திறமைகளை மழுங்கடிக்கிறது.
'நாம் ஒரு செயலைச் செய்வதன் மூலம், அதற்கென ஒதுக்கப்படும் நேரத்தைச் செலவிடுகிறோமா, வீணடிக்கிறோமா அல்லது முதலீடு செய்கிறோமா என்பதைத் தீர்மானித்தாலே, நேர நிர்வாகத்தில் அடிப்படை நமக்குக் கைவந்துவிட்டது என்று உணரலாம்
சாப்பிடுவது, குளிப்பதுபோன்ற அன்றாட விஷயங்களுக்கு நாம் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். அந்த நேரத்தைச் செலவழிக்கிறோம் எனலாம். டி.வி. பார்ப்பது, இணையத்தில் விளையாடுவது, கல்லூரி வகுப்பிலோ, பணியிடத்திலோ வெட்டி அரட்டைகளில் ஈடுபடுவது நேரத்தை வீணடிக்கும் பட்டியலில் சேரும். உடற்பயிற்சி, நல்ல புத்தகங்களைப் படிப்பது, புதிய மொழியைக் கற்றுக்கொள்வதுபோன்றவை நேரத்தை முதலீடு செய்யும் வகையில் அடங்கும். நமது எந்தச் செயலையுமே நிச்சயம் இந்த மூன்று பிரிவுகளுள் ஏதேனும் ஒன்றில் அடக்கிவிடலாம். நீங்கள் ஒரு செயலைச் செய்யும்போது, இவற்றுள் எந்தப் பட்டியலில் அது அடங்கும் என்பதை நேர்மையாகத் தீர்மானியுங்கள். அப்படி கணிக்கத் துவங்கினாலே, உங்களது பெரும்பாலான விரயங்களும், அநாவசியச் செலவுகளும் முதலீடாக மாறும்.
நமக்குப் பிடிக்காத, அவ்வளவாக ஆர்வத்தைத் தூண்டாத வேலைகளையும் நாம் செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் கடினமானதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பதிலை மட்டும் பிறகு படிக்கலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். தொடர்ந்து படிக்கும்போது, அதேபோல மேலும் நான்கைந்து கேள்விகள் கடினமாக இருந்தால், அவற்றையும் 'பிறகு படிக்கலாம்' என்று அடுக்கிவைக்கிறீர்கள். பிறகு என்ன நடக்கும்? சுலபமான பதில்களைப் படிக்கும்போதுகூட, மிச்சம் இருக்கும் அந்தக் கடினமான பதில்கள்தான் உங்கள் மனதுக்குள் பூதமாக அமர்ந்திருக்கும். அவற்றை எப்படி எதிர்கொள்வது என்ற பதற்றத்திலேயே உங்கள் இயல்பான திறன் பாதிக்கப்படலாம். அதற்குப் பதில் அந்தக் கடினமான பதிலை முதலிலேயே படித்து முடித்துவிட்டால், பெரும் சுமை நீங்கிய திருப்தியுடன் மற்ற பகுதிகளை எதிர்கொள்ளலாம். ஆர்வம் இல்லாத அல்லது கடினமான வேலைகளை முதலிலேயே முடித்துவிடுவதன் மூலம், தேவை இல்லாத எரிச்சலைத் தவிர்க்கலாம்
No comments:
Post a Comment